Thursday, March 17, 2011

ஜப்பானில் சுனாமியின் தாக்கம்



டோக்கியோவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் கடலுக்கு அடியில் 20 மைல்கள் ஆழத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடுமையான பூகம்பம், ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவாகியிருந்தது.  அதை தொடர்ந்து  எழுந்த  பிரம்மண்ட சுனாமிப் பேரலை ஜப்பானின் துறைமுக நகரான செண்டாய் நகரத்தை முற்றிலுமாக அழித்த்து.

புதன்கிழமை காலை வரை சுமார் 3,700 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

சுனாமி பாதிக்கப்பட்ட இடங்களில் உணவு, தண்ணீர், எரிபொருள் பற்றாக்குறை அம்மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு நீடிக்கிறது.

பூகம்பம் - சுனாமியைத் தொடர்ந்து, ஃபுகிஷிமாவில் உள்ள அணுமின் நிலையத்தில் ஒன்றன் பின் ஒன்றாக 4 அணு உலைகள் பாதிக்கப்பட்டன. அவற்றின், குளிரூட்டும் கட்டமைப்பு முற்றிலும் சேதமடைந்தன.

இதுவரை நான்கு முறை வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததின் தொடர்ச்சியாக், அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு காற்றில் பரவத் தொடங்கியது.

காற்றில் கலக்கும் அணுக் கதிர்வீச்சினால் மனிதர்களுக்கு உடல் நலன் வெகுவாக பாதிக்கும் என்று அறிவித்த ஜப்பான் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. 

அணு உலைகள் இருக்குமிடத்தில் இருந்து 20 முதல் 30 கிலோ மீட்டர் வரை மக்கள் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதுடன், அந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்;  வெளியே வரக் கூடாது என எச்சரிக்கப்பட்டனர்.
ஓரளவு கட்டுப்பாடான அளவுக்குள் கதிரியக்க தாக்கத்துக்கு உள்ளாகுபவர்களுக்கு முதற் கட்டமாக வாந்தி, வயிற்றோட்டம், தலைவலி காய்ச்சல் போன்ற சாதாரண நோய் அறிகுறிகளே ஏற்படும்.

ஆனால், முதற்கட்ட அறிகுறிகளுக்குப் பின்னர், சில காலம் குறிப்பிடத்தக்க நோய்கள் எதுவும் காட்டாத போதிலும் கூட பின்னர் சில வாரங்களிலேயே இன்னும் மோசமான அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது.

இதேவேளை, உயர் அளவு கொண்ட கதிரியக்கத்தின் தாக்கத்துக்கு உள்ளாகுவோர் இந்த எல்லா அறிகுறிகளுடன் உயிரிழக்கக் கூடிய அளவுக்கு உடல் உள்ளுறுப்புகள் எல்லாம் சேதமடைந்து போகக்கூடிய ஆபத்து இருக்கின்றது.

உடலுக்குள் ஊடுறுவும் உயர் கதிரியக்கம், உடலில் இராசயன சுரப்பிக் கட்டமைப்புகளை சேதப்படுத்தி, அதன்மூலம் உடல் திசுக்களையும் பாதிக்கச் செய்யும்.

கதிரியக்கத்தின் ஊடுறுவால் ஏற்படக்கூடிய நெடுங்கால பாதிப்பு என்றால் புற்றுநோய்களே.

அணுக்கதிர் வீச்சின் பாதிப்பு அங்கு உற்பத்தியாகும் பொருட்களையும் பாதிக்கும்.

ஜப்பானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் அனைத்தையும் கதிர்வீச்சு பரிசோதனை மேற்கோள்ள இந்தியா, தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் உத்தரவிட்டுள்ளன.


No comments:

Post a Comment