Thursday, June 2, 2011

தேடப்படும் குற்றவாளிகளில் மரணித்தவர்கள்

புதுடெல்லி:பாகிஸ்தானிடம் ஒப்படைத்த தேடப்படும் பிரபல தீவிரவாதிகளின் பட்டியலில் இந்தியாவில் வசிப்பவரும், சிறையில் அடைக்கப்பட்டவர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது ஏற்கனவே நாம் அறிந்த செய்தி. ஆனால், தற்போது அதில் இறந்து போன நபர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியைத்தொடர்ந்து நேற்று சி.பி.ஐ தனது இணைய தளத்தில் இருந்து அப்பட்டியலை நீக்கிவிட்டது.

இந்தியா பாகிஸ்தானிடம் ஒப்படைத்த தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் இரண்டு பேர் சிறையில் உள்ளனர். மூன்று பேர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டனர். ஒருவர் மும்பையில் சேலை வியாபாரம் செய்துவருகிறார். இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன் இந்தியாவிற்கு தலைகுனிவையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பட்டியலை மறு பரிசீலனை செய்யப்படும் என உள்துறை அறிவித்தது. சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ எஸ்.பி மற்றும் துணை எஸ்.பி ஆகியோர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் தாவூத் இப்ராஹீமின் சகோதரர் நூறாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நூறா கடந்த ஆண்டு பாகிஸ்தானில் லாகூர் மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இஜாஸ்கான் 2008-ஆம் ஆண்டு ஆர்தர் சாலை சிறையில் இதய அதிர்ச்சி மூலம் மரணமடைந்தார்.

பங்களாதேஷை தலைமையிடமாக கொண்டு செயல்படுவதாக கூறப்படும் ஹுஜி அமைப்பின் தென்னிந்திய கமாண்டர் ஷாஹித் பிலால் என்ற முஹம்மது அப்துல் ராஷித் மரணமடைந்துவிட்டார். ஹைதராபாத்தில் செர்லாபள்ளி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஹம்மது அம்ஜத், மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெரோஸ் அப்துல் ராஷித் கான் ஆகியோரும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மும்பை போலீஸ்,என்.ஐ.ஏ, ஐ.பி, ரா, சி.பி.ஐ ஆகிய புலனாய்வு ஏஜன்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானிடம் ஒப்படைத்த 50 தேடப்படும் முக்கிய தீவிரவாதிகளின் பட்டியலை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment